கும்பகர்ணன்

கும்பகர்ணன் இமையத்தின் பனிக்கல்லில் இசியும் கங்கை
சேற்றில் பிறந்த செந்தாமரை
தூங்கிக் கிடந்த ஓங்கல் மலை
உயரமாணவன், அதே சமயம் பணிவானன்
கம்பன் இரசித்து இரசித்து உருவாக்கிய காதாபாத்திரங்களில் கும்பனும் ஒருவன்.
அவன் மட்டும் தூங்காமல் இருந்திருந்தால் இராவணன் தவறு செய்யும் போதே தடுத்திருப்பான்.
தவம் மிகுந்தவன். ஆனால் ஏமாற்றப்பட்டவன்
சாவா வரம் கேட்க நினைத்து ஓயாத் தூக்கம் வரமாகப் பெற்றவன்
அரக்க குணமுடையவன் தான்.  அதேசமயம் அதர்ம வழி செல்ல நினையாதவன்

அவன் நின்றால் இமயமலை, கிடந்தால் விந்திய மலை.

வால்மீகி காட்டுகின்ற கும்பகர்ணனை மட்டும் படித்துவிட்டுக் கம்பன் காட்டும் கும்பனைப் படிக்காதிருந்தால் அற்புதமான ஒரு படைப்பை நாம் தவற விட்டிருப்போம்

வால்மீகி கண்டதைச் சொன்னார். கம்பன் கவிக்கொண்டலாய்ச் சொன்னான். துளசி தொண்டனாய்ச் சொன்னார். கம்பன் கவிக்கொண்டலாக, நாடகப் புலவனாகக் கும்பகர்ணனை எப்படிப்படைத்திருக்கிறார் என்பதைப்பார்க்கலாம்

தர்ம சங்கடமான ஒரு நிலையில் கதாபாத்திரங்கள் எப்படி நடந்துகொள்கின்ற என்பதை வைத்துத்தான் அக்கதாபாத்திரங்களின் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும். கும்பகர்ணனுக்கும் அவனது தம்பி விபீஷணனுக்கும் ஒரே மாதிரியான தர்மசங்கடமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரண்டுபேரும் வெவ்வேறு வகையாக அதைக் கையாள்கிறார்கள். என்றாலும் இருவரும் வெவ்வேறு வகையிலே உயர்ந்துநிற்கிறார்கள். அதைப்பின்பு பார்க்கலாம்

 

கும்பகர்ணன் வரம்

கும்பகர்ணன் தவத்தில் மிக்கவன். அவன் கேட்க நினைக்கும் சாகா வரத்தை அவன் பெற்றுவிட்டால் தேவர்கள் கதி அதோகதிதான் என்று நினைத்த இந்திரன் சரஸ்வதியை வேண்ட கும்பகர்ணன் பிரம்மாவிடம் வரம் வேண்டும் போது அவனது நாக்கைச் சற்றுப் பிறழ வைத்துவிடுகிறாள். நித்தியத்துவம் என்று கேட்க நினைத்தவன் நித்திரைத்துவம் என்று கேட்டு விடுகிறான். அதனால் சதா தூங்கிக்கொண்டிருக்கும் வரத்தைப் பெற்று விடுகிறான். இராவணனும்  அவனது சகோதரர்களும் பிரம்ம குலத்தைச் சேர்ந்தவர்கள். பிரம்மதேவன் மானச புத்திரர்களில் புலத்தியன் என்பவனும் ஒருவன். அந்தணன். அவன் ஒரு அரக்கியை மணக்க நேரந்ததால் அவனது வமிசத்தினர் அரக்கர்களாக ஆகிவிடுகிறார்கள். புலத்தியன் இராவணனுக்குத் தாத்தா. எனவே பிரம்மாவுக்கு இராவணனிடமும் அவனது சகோதரர்களிடம் ஒரு பாசப்பிணைப்பு உண்டு. எனவே இராவணன் பிரம்மாவிடம் வேண்ட பிரம்மா கும்பகர்ணனின் தூக்க வரத்தைச் சற்றே மாற்றி ஆறுமாதங்கள் தூங்கவும் ஆறுமாதங்கள் விழித்திருக்கவுமாகச் செய்துவிடுகிறார்.

இன்னொரு வகையாகவும் அவன் தூக்க வரம் பெற்றதைப்பற்றி ஒரு கதையிருக்கிறது. கும்பகர்ணன் கடுமையான பசிய உடையவன். கையில் கிடைத்த ஜீவ ராசிகளையெல்லாம் அப்படி அப்படியே உண்டு வந்தானாம். எல்லோரும் பிரம்மாவிடம் முறையிட அவனுக்குத் தூக்கச் சாபம் கொடுத்துவிடுகிறார்.  இராவணன் வேண்ட அவன் எழுப்பப்பட்டால் ஒருநாள் மட்டும் விழித்திருப்பான். அப்பொழுது அவன் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளட்டும் என்று பிரம்மா வரத்தை மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.

கும்பகர்ணன் அறிமுகம்


கும்பகர்ணனைக் கம்பன் அறிமுகப்படுத்தும் காட்சியைப் பார்க்கலாம், அனுமன் வந்து இலங்கையை எரியூட்டிச் சென்று விட்ட பிறகு இராவணன் தனது மந்திரிகளொடும், மகன் இந்திரஜித்தொடும் , தம்பியரொடும் மந்திராலோசனை நடத்துகிறான்.. அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்

“தாழ்ச்சி இங்கு இதனின் மேல்வருவது என்,இனி?
மாட்சியி ல் ஓர் குரங்கினால் அழிந்த, மாதவர்
ஆட்சியும் அமைவும், என் அரசும் நன்று” எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்”


சுட்டது குரங்கு,எரி சூறையாடிடக்
கெட்டது கொடி நகர், கிளையும் நண்பரும்
பட்டனர், பரிபவம் பரந்த்து,எங்கணும்

இட்டது இவ்வரியணை இருந்தது என் உடல்”


என்று வருந்திப்பேசினான். என்ன உபாயம் என்று மந்திரக் கிழவர்களைக் கேட்க, இராவணன் எதிர்பார்த்ததைப் போலவே எல்லோரும் இராவணனைப் பாராட்டியே பேசினர். கும்பகர்ணன் விழித்திருக்கும் சமயம் அது.    அவனையும் இராவணன் கேட்கிறான். கும்பகர்ணன் சொல்கிறான்

“அண்ணா, உன்குலம் பிரம்ம குலம். இதில் தனிசிறப்புற்று  நீயிருக்கிறாய். ஒரு குரங்கு சுட்டது என்று கவல்கிறாய். நீ மாற்றான் தேவியை நயந்து சிறைவைத்த செயல் நன்றோ?  இதை விட வேறு பழியுண்டா? நீ என்று ஒரு மன்னவன் இல்லுறை தவத்தியை சிறை வைத்தாயோ அன்றே அரக்கர் புகழ் ஒழியத்தொடங்கிவிட்டது. நாம் பேசுவது மானம். இடை பேணுவது காமம், கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம். “ என்று சொல்கிறான். இராவணனுக்குக் கோபம் மீறுகிறது. கும்பகர்ணன் நீதிமானானாலும் அரக்க குணம் கொண்டவன்தான். தொடர்ந்து சொல்லுகிறான்

“”தவறு செய்துவிட்டோம். இப்பொழுது அவளை விட்டுவிடுவோம் என்றால்
அது சரியன்று. மானுடர்களை வெல்ல விட்டால் நம் குலப்பெருமை மாயும். அதனாலே நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் அவர்கள் வந்து தாக்கும்  முன்னம் நாம் அவர்களை எதிர்கொண்டு  வெல்லவேண்டும். சீதையைக் கவர்வதற்கு முன் போரிட்டு இராமனைக் கொன்று சீதையைச் சிறைப்பிடித்து வந்திருந்தால் கணவனில்லாத அவள் உனக்கு இணங்கியிருப்பாள். ”என்றான். தம்பியின் பின்பகுதிக்கூற்று இராவணனுக்கு இதமளித்தது.

இந்திரஜித்து மற்றும் ஏனையர் போர் செய்வோமென்றனர். அப்பொழுது அதை மறுத்து விபீஷணன் தர்மத்தை எடுத்தியம்புகிறான். அதோடு இரணியன் கதையையும் விரிவாகச் சொல்லுகிறான். இராவணன் விபீஷணனை எள்ளி நகையாடிச் சொல்கிறான்

“உன்னைக் கொன்றால் பழி வருமே என்று கொல்லவில்லை. என் முகத்தில் விழிக்காதே. ஓடிப்போய்விடு”

விபீஷணன் இலங்கையை நீங்கி இராமனிடம் சென்று விடுகிறான். விபீஷணின் கூற்று கும்பகர்ணனின் மனத்தில் ஒருபெருத்த மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.  விபீஷணன் கூற்றுக்கு முந்திய கும்பகர்ணன் வேறு அவன் கூற்றைக்கேட்டபின் மாறிவிட்ட கும்பகர்ணன் வேறு என்பதைக் காணப் போகிறோம். கும்பகர்ணன் உறங்கச் சென்று விடுகிறான்.

 

கும்பகர்ணனை எழுப்புதல்

இராமன் அணைகட்டி இலங்கைக்குள் வந்து விடுகிறான். அவனொடு இராவணன் பொருதுகிறான். போரில்தோற்று  வீரமும் களத்தில் போட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் வந்துவிடுகிறான். இப்படிச் சோர்ந்த நிலையில் இருக்கும் போது மகோதரன் கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கனுப்பும் படி கூறுகிறான். கும்பகர்ணனை எழுப்பப்பல வீர்ர்கள் அனுப்பப்படுகின்றனர். கும்பகர்ணன் 600 தநு உயரமுடையவன். அதாவது 3600 அடி உயரம். 600 அடி அகலமான உடம்பையுடையவன். அவன் உறங்குவதற்கென்று தனியாக மண்டபம் கட்டிவைக்கப்பட்டிருந்த்து. அதனுள்தான் அவன் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் நாசித்துவாரங்கள்   திறந்திருக்கும் பெரிய குகைகளைப் போன்றிருந்தன. அவன் மூச்சு விடும் போது அந்தப்பக்காம்   எவரேனும் போனால் நாசித்துவாரங்களுக்குள்  இழுக்கப்பட்டுவிடுவர். அதற்குப் பயந்தே பல அரக்கர்கள் அவனை நெருங்கப் பயந்தனர். அன்று பல அரக்கர்கள் பக்கவாட்டில் சென்று அவனை உலக்கையால் குத்தினர். எழுந்திருக்க வில்லை. . அவனைப்பிடிக்காதவர்கள் முரசடித்துக்கொண்டே அவனைத் திட்டினார்கள். ”எழுந்திரு. நீ காலதூதர் கையிலேதான் உறங்கப்போகிறாய்” என்றார்கள். கம்பனின் அந்தப்பாடலின் சந்தம் முரசறைவதைப்போலவே இருக்கும்.

“உறங்கு கின்ற கும்ப கர்ண உங்கள் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்துறங்குவாய்

“என்றார்கள். யானைகளை அழைத்துவந்து அவன் மார்பில் நடக்க விட்டார்கள். ஏதும் பயனில்லை.

சுடச்சுட மாமிச உணவு தயாரித்து ஆவி பறக்க அவன் நாசியின் அருகே வைத்தார்கள்..  உடனே எழுந்தான். 1500 சகடங்களில் உணவு.  நூறு நூறு
குடங்களில் கள். பல குடங்களில் இரத்தம்.  1200 எருமைகள் படைத்தார்கள். பசியைத் தூண்டிவிடுகிற தொடக்க உணவாகத்தான் அவையிருந்தன. “அண்ணன் அழைத்தான் “ என்றார்கள். அண்ணனிடம் சென்று கீழே விழுந்து வணங்கினான். கும்பகர்ணன் அமர்ந்த உயரம் இராவணின் நிற்கிற உயரம். தம்பியை அரவணைத்து அவனுக்கு உணவளித்து யுத்தத்திற்குச் சன்னத்தமாக அலங்காரம் செய்தான். எதற்கிந்த ஆயத்தம் என்று கேட்டான் கும்பன்.

“ பெரும் வான்ரப்படையும், மனிதர்களும் நம் கோநகர்ப்புறம் சுற்றி நிற்கிறார்கள். நீ சென்று அவர்களோடு போரிட்டு அவர்களைப் போஜனம் செய்து வா” என்றான் இராவணன்.

 

கும்பகர்ணனின் பேச்சு, கம்பனின் வீச்சு

தூங்கச்செல்லுமுன் சீதையை இனி விடுவது அவமானம். போர் செய்ய வேண்டும் என்று சொன்ன கும்பகர்ணன் இப்பொழுது பேசுவது அதற்கு நேர் மாறாக இருக்கிறது

“”ஆனதோ வெஞ்சமர்? அலகில் கற்புடைச்
சானகி துயர் இனும் தவிர்ந்த தில்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே!”  என்றான்

 மேலும் தொடர்ந்து

“சீதையினுடைய பார்வை பார்வையாலேயே கொல்லக்கூடிய திட்டிவிடம் போன்ற பாம்பைப் போன்றது. அந்தக் கற்பின் செல்வியை நீ இன்னும் விட்டிலையோ, உன்னாலே புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு குலத்தியல்பு அழிந்தது, அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளிந்து கொண்டது.  நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்.”

“தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து, நின்
ஐயறு தம்பியொடு அளவளாவுதல்
உய்திறம், ”என்றான்

“என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ என் அமைச்சன் இல்லை.  பயந்துவிட்டாய் போலிருக்கிறது. . நன்றாகச் சாப்பிட்டாய் அல்லவா? போ தூங்கு போ.. மானுடரையும் குரங்கையும் வணங்குதல் உனக்கும் உன் தம்பிக்கும் தான் நன்று. எனக்கு வேண்டாம். நீ போ. நானே போருக்குப் போகிறேன். தருக தேர்” என்றான் இராவணன்


“உடனே கும்பகர்ணன்””அண்ணா, பொறுத்துக்கொள். “ என்று சொல்லி கையிலே கொடிய நெடுஞ்சூலத்தை வாங்கிக்கொண்டு மேலும் தொடர்ந்து சொன்னான்” அண்ணா நான் வென்று வருவேன் என்று சொல்லவில்லை. விதி பிடித்து உந்துகின்றது. . இறந்து விடுவேன். இறந்தால் இராமன் தேவியை விட்டுவிடுவாயாக. இந்திரஜித்தன் நிச்சயமாக எதிர்த்து நிற்க முடியாது என்னை அவர்கள் வென்றால் உன்னையும் வென்று விடுவர். என்னை வென்றால் தேவியை விட்டு விடு. இற்றைநாள்வரை நான் உனகு ஏதேனும் குற்றம் புரிந்திருந்தால் என்னை மன்னித்துவிடு. இதோ விடைபெறுகிறேன் என்று சொலிவிட்டுச் சென்றான்.  இராவணின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்த்து. ஒரு பெரும் படையை  கும்பகர்ணனுக்குத் துணையாக அனுப்பினான். கும்பகர்ணனுக்கு ஏற்றவண்ணம் பெரிய தேர் வந்தது. அதில் தாவி ஏறினான். தேரின் இரண்டு புறமும் அவன் சாப்பிடுவதற்கு ஏதுவான உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டன. கும்பகர்ணன் போருக்குக் கிளம்பினான்.

வருகிறபோதே தனது இருகைகளாலும் வானரர்களைப் பிடித்து வாயில் போட்டு விழுங்கிக்கொண்டே வருகிறான்.  அவன வயிற்றுக்குள் பெரிய இடமிருப்பதால் உள்ளே போன வானரர்கள் சிலர் மூக்குத் துவாரத்தின் வழியாக வெளியே வந்துவிடுகிறார்கள். இராமன் கும்பகர்ணனைப் பார்க்கிறான். அதோவருகிறனே அவனுடைய தோளை ஒரு முனையிலிருந்து மறு முனைவரை பார்க்கப்பல நாட்கள் ஆகும் போலிருக்கிறதே இவன் யார் என்று கேட்கிறான். “இவன் தான் என் அண்ணன், இராவணனுக்குத் தம்பி. மிகவும் நல்லவன். இராவணனுக்கு நல்ல அறிவுரைகள் சொன்னவன்” ” என்கிறான் விபீடணன். ”அப்படியானால் அவனை நம் பக்கம் சேர்த்துக் கொள்ளலாமே” என்கிறான் சுக்ரீவன்.

“சுக்ரீவன் சொல்வது சரி. அவனிடம் போய் யார் பேசுவார்கள்” என்று இராமன் கேட்க “நான் போய்ப் பேசுகிறேன் என்கிறான் விபீடணன். இராமன் ஒப்புக்கொள்ள விபீடணன் போகிறான். விபீடணன் நின்னைக் காண வருகிறான் “ என்று எவரோ கும்பகர்ணனிடம் சொல்லும் போது கும்பகர்ணனின் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. விபீடனின் அருகில் வந்ததும் அவனைக் கட்டித் தழுவிக்கொள்கிறான். கண்ணீர் விடுகிறான். தம்பியின் மேல் அவ்வளவு பாசம். அண்ணனின் மீது அடங்காத அன்பு. தம்பியிடம் சொல்கிறான்

“புலத்தியர் குலத்தில் ஒருவன் உய்வு பெற்றுவிட்டான் என மகிழ்கிறேன். நீ என்னவென்றால் அறிவில்லாதவர்கள் போல, மீண்டும் வந்துவிட்டாயே, அதுவும் தனியாக வந்துவிட்டாயே,”என்று சொன்னவன், அறிவிலான் போலென்று சொன்னாலும் அவனைக் “கவிஞரின் அறிவின் மிக்காய் என்று பாராட்டுகிறான். கவிஞன் பார்க்கிற பார்வையே வேறு. மற்றவர்கள் காணாததை அவன் கண்டுவிடுவான். மேலும் தொடர்ந்து?” நீ ஏன் வந்தாய். இராம பக்தி என்னும் அமுதை உண்டுகொண்டிருக்கும் நீ நஞ்சை உண்ணுவதற்காக வரலாமா?” என்று கேட்கிறான்

“தம்பி , அண்ணன் செய்த தீமையால் குலத்தியல்பு கெட்ட்து. உன்னைக் கொண்டே புலத்தியன் மரபு அழியாத புகழை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தேனே!அய்யோ நீயும் இப்படித் திரும்ப வந்து நிற்கிறாயே, என் மனம் வேகிறதே , என்ன செய்வேன்? பிரம்மா கொடுத்த வரத்தால் சிரஞ்சீவியாக வாழும் சிறப்புப் பெற்றாய். இன்னும் இந்தச் சாதிப்புத்தி உன்னை விட்டுப் போகவில்லையா? தம்பி,  நாங்கள், அண்ணன் இராவணன் உட்பட எல்லோரும் நிச்சயம் இறந்துபோவோம். அப்பொழுது புலத்தியன் குலத்தைச் சேர்ந்த நாங்களெல்லாம் நற்கதியடைய எங்களுக்கு எள்நீர் விட நீ ஒருவனாவது உயிருடன் இருக்க வேண்டாமா? எனவே இந்த அண்ணன் சொல்வதற்குச் செவிசாய்ப்பாயானால் உடனே இராமனிடம் சென்று விடு” என்கிறான்

“அண்ணா நான் சொல்ல வேண்டியது ஒன்றுளது. இராமபிரான்தான் என்னை உன்னிடம் அனுப்பினான். நீ இராமபிரான் பக்கம் வந்துவிடு. அவன் எனக்கு இலங்கை இராஜ்ஜியத்தை அளிப்பதாக வாக்களித்திருக்கிறான். நான் அதை உனக்குத் தந்துவிடுகிறேன் “ என்கிறான்.

கும்பகர்ணன் சொல்லும் பதில் இருகிறதே அதைக் கம்பன் காட்டிய கவிதை உலகத் தரம் வாய்ந்தது

“நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு
உயிர்கொடாதங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த
என்துயர் தவிர்தி ஆயின்
கார்க்கோல மேனியானைக்
  கூடுதி கடுதின் ஏகி” என்கிறான்.

தனக்கும் இந்த நீதி பொருந்துமே என்று வீடணன் சொல்லிவிடப்போகிறானே என்று, ”தம்பி, அண்ணன் மாண்டு அவனுடல் மண்ணில் கிடக்குமுன் அவனுடைய  தம்பியாகிய என்னுடல் அவன் அருகே கிடக்கவேண்டாமா தரும வாழ்வு வாழ நீ பிரம்மாவிடம் இருந்து வரத்தைப் பெற்றாய். தலைவன் நீ உலகுக்கெல்லாம். , உனக்கு அதுதான் தக்கது. எனக்குப் புலையுறு மரணம் தான் தக்கது. எனக்கு அதுதான் புகழ். . எமலோகத்திலே அண்ணன் எமனின் முன் நிற்கும் போனதும் அவனருகே நான் நிற்கவேண்டாமா? எனவே நீ திரும்பிப்போ.  நம் குலத்தில் அழிந்துபட்டவர்க்கெல்லாம் ஆதி நூல் மரபுப்படி கருமங்கள் செய்து அவர்கள் நரகம் போகாத படி காத்தருள்வாயாக” என்றான்.

உடன் பிறப்பு என்பது இன்றோடு தொலைந்தது என வருந்தினான்.  வேறு வழியின்றி , அவனை வணங்கிவிட்டு விபீடணன் இராமனிடம் சென்று விடுகிறான்.

தன்னாலே என்னவெல்லாம் தீரம் காட்ட முடியுமோ அத்தனையையும் காட்டுகிறான் கும்பகர்ணன்.  அனுமனின் சவாலை ஏற்று அவன் எறிந்த மலையைச் சிறிதும் துணுக்கமின்றி எதிர்கொண்டான் கும்பகர்ணன். அதனாலே அனுமன் அதற்குப் பிறகு கும்பகர்ணனுடன் போர் புரியவில்லை.

      கும்பகர்ணன் அதன் பிறகு பல பெரிய வீர்ர்களுடன் போர் புரிகிறான். இலக்குவனுடனும், அங்கதனுடனும்  போர் புரிகிறான்.  பிறகு சுக்ரீவனைத் தூக்கி கொண்டு இலங்கை வயிலை நோக்கி ஓடுகிறான். அப்பொழுது இராமன் அவனை எதிர்கொள்கிறான்.. இராமனிடம் சொல்கிறான்”\

“இலக்குவன் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அனுமனின் மேலும் கோபம் வரவில்லை, சுக்ரீவன் மேலும்  கோபம் வரவில்லை . காரணம் அவர்கள் எனக்குச் சமமானவர்கள் அல்ல. அவர்களை வீழ்த்துவதால் எனக்குப் புகழில்லை என்பதால்” என்கிறான். பிறகு இராமனுக்குச் சவால் விடுக்கிறான்.

“”இதோ பிடித்து வைத்திருக்கிறேனே இந்தச் சுக்ரீவனைப் பிடித்திருக்கும் இந்தக் கையை உன் அம்பினால் அறுத்துத் தள்ளி சுக்ரீவனை நீ விடுவித்தால் சீதை சிறை நீங்கினாள் என்று கருதிக்கொள்”

இராமன் சொல்கிறான்

“”என்றலும் முறுவலித்து,  இராமன் யானுடை
இன்துணை ஒருவனை எடுத்த தோளெனும்
குன்றினை அரிந்துயான் குறைக்கிலேன் எனின்
பின்றினன் உனக்கு, வில் பிடிக்கிலேன்” என்றான்

சொன்னபடியே இராமன் இரண்டு அம்பு விடுக்கிறான். அவற்றால் அவனது தலை பிளவுபட்டு இரத்தம் கொட்டுகிறது . இரத்தம் சுக்ர்ர்வன் முகத்தில் விழவே உணர்வு பெற்றுச் சுக்ரீவன் கும்பனின் மூக்கையும் செவிகளையும் கடித்து உருத்தெரியாமல் செய்து விட்டுத் தப்பி இராமனிடம் வந்து விடுகிறான். இராமன் கும்பனின் கைகள் ஒவ்வொன்றாக்க் கொய்கிறான். அவனுக்கு உயிர்ப்பிச்சையும் அளிக்கிறான். ஆனால் கும்பன் அதை ஏற்கவில்லை, போரிடுகிறான்.  உறுப்புகள் குறைந்த நிலையிலும் வானர வீர்ர்களை அழிவு செய்கிறான். அவனுடைய கால்களும் போயின. அப்பொழுதும் விடவில்லை. புரண்டு புரண்டு வானர வீர்ர்களை வதைக்கிறான். பிறகு இராமனிடம் வேண்டுகிறான்.

“என் தம்பியை இராவணன் சும்மா விட மாட்டான். எனவே அவனைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுகிறேன். உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான் எம்பி பிரியானாக அருளுtதி என வேண்டுகிறான். தொடர்ந்து இராமனிடம் இன்னொரு வேண்டுகோளும் வைக்கிறான்

மூக்கு இலா முகமென்று முனிவர்களும் அமர்ர்களும் நோக்குவர்.. எனவே அவர்கள் நோக்கா வண்ணம்  என் தலையை அரிந்து அதை எடுத்துக்கொண்டு நடுக்கடலில் தள்ளிவிட வேண்டுகிறேன்” என்றான்

இராமன் வேறு வழியின்றி அவ்வாறே செய்தான்.

அரக்கனாக இருந்தாலும் தனது தர்மம் தவறாத சிந்தையாலும் செயலாலும் அண்ணன் தம்பி இரண்டு பேர் மீதும் கொண்ட பாசத்தாலும் இறவாப்புகழ் பெற்றான் கும்பகர்ணன்.


தழலுக்குள் செந்தண்மை, வாடைக் காற்று

தன்திசையில் மாறியதால் வீசும் தென்றல்

நிழக்குள் ஒளிகின்ற கருமைப் பூத

நிமிர்வுக்குள் சொர்க்க தம்,தெளிவில் லாத

மழலைக்குள் மறைகின்ற போதம்,தாழை

மடலுக்குள் மயக்குகிற வாசம்,வாழ்க்கைச்

சுழலுக்குள் திமிர்கின்ற அனுப வத்தின்

சுவைப்பந்தல், வையே எம் கும்ப கர்ணன்.


இமயத்தின் பனிக்கல்லில் சியும் கங்கை

ஏசுகிற தாயுள்ளம் நெய்யும் வாழ்த்து

குமையத்தான் ஊட்டுகிறேன் என்பான் முன்னே

கொடுக்கத்தான் உண்கின்றேன் என்னும் வீச்சு

சமயத்திற் கேற்றாற்போல் மாறு கின்ற

சாகசத்தில் சிக்காத நேர்மை, நீதி

அமையத்தான் நீதியினை எதிர்த்து நிற்கும்

       அறநெஞ்சம் இவையே எம் கும்ப கர்ணன்.


கும்பகர்ணன் புகழ் வாழ்க!





I BUILT MY SITE FOR FREE USING