26 May

தெற்கிலந்தைக் குளமென்னும் ஊரெங்கள் ஊரே!

கவிமாமணி இலந்தை சு இராமசாமி

பிறந்த இடம் ஒன்று தவழ்ந்த இடம் ஒன்று வளர்ந்த இடம் ஒன்று வாழும் இடம் ஒன்று என மாறி மாறி வரும் இந்த வாழ்க்கையிலே எந்த இடத்தை என் சொந்த இடம் என்று சொல்வது

அப்பன் மண்ணா இல்லை ஆத்தா மண்ணா இல்லை

அப்பனும் ஆத்தாளும் வாழ்ந்த மண்ணா

முப்பாட்டன் முப்பாட்டன் முப்பாபட்டனின் பாட்டன்

முந்தி இருந்து தொலைத்த மண்ணா?

எந்த மண்ணை என்றன் சொந்தமண் என்பது?

ஏதும் புரியலே தோழர்களே!


சிறுகுழந்தையாய்த் தவழ்ந்த போது எந்த மண்ணை எனது நாக்குச் சுவைத்ததோ, எந்த மண்ணின் பெயர் எனது இயற்பெயருக்கு முன்னால்  அமர்ந்து கொண்டு எனக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறதோ அந்த மண்ணை தெற்கு இலந்தைக் குளம் என்னும் ஊரைப்பற்றி இப்பொழுது நான் சொல்லப்போகிறேன்.

தென்பொதிகை மலைத் தோன்றித் தவழ்ந்துவரும் தென்றல்

செந்தமிழ்த்தேன் நறவத்தைத் தேக்கிவரும் தென்றல்

தென்னைமர உச்சியிலே சேர்ந்திசைகள் பாடும்

தெற்கிலந்தைக் குழமென்னும் ஊரெங்கள் ஊரே

எங்கள் ஊர்  சிதம்பரனார் மாவட்டத்தில் கயத்தாறுக்கு அருகே இருக்கிற ஒரு சிறிய கிராமம். இலந்தஞ்செடிகள் அதிகம் இருந்த காரணத்தாலே அதற்கு இலந்தைக்குளம் என்று பெயர் வந்தது.

அந்தக்காலத்திலே கயத்தாறு சிற்றரசின் கீழ் எங்கள் ஊர் இருந்த காரணத்தால்  எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகளையும் கயத்தாறுக்கு ஏற்றிச் சொல்லிவிடுவதுண்டு. வீரபாண்டிய கட்டப்பொம்மனைத் தூக்கிலிட்ட இடமும் அவரது சிலையும் எங்கள் ஊர் எல்லையில் தான் உள்ளன. எங்கள் ஊர் மாதரார் தங்களுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைக்கு வீரம் வருவதற்காக கட்டப்பொம்மன் நினைவகத்திலிருந்து மண்ணெடுத்துத் தேனில் குழைத்துக்கொடுப்பார்களாம்.

கட்டப்பொம்மன் நினைவகத்திலிருந்து நேர் மேற்கே இருப்பது தீர்த்தக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகின்ற அகிலாண்ட ஈஸ்வரியம்மன் கோவில். இராமபிரான் சீதையை அழைத்துக்கொண்டு இங்கு வந்த போது சீதைக்குத் தாகம் எடுக்கவே தனது வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய அங்கே நீர் பிரவாகமெடுத்தது. அந்த இடம்தான் இப்பொழுது கோவிலுக்குள் ஒரு கிணறாக இருக்கிறது. இராமன் தனது கோதண்டத்தை சிவனின் முன் வைத்து வணங்க சிவபிரான் மகிழ்ந்து தன் பெயரையே கோதண்டராமேஸ்வரர் என்று மாற்றிக்கொண்டார். சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த அக்கோவிலில்  சனீஸ்வரன் காகத்தின் மேலில்லாமல் ஆவுடையார் மேல்நின்றிருப்பது ஒரு விசேஷம்

மதுரை நாயக்க மன்னர்களின் தளபதியாக இருந்த திருவேங்கட நாதர் என்ற அந்தணர் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கயத்தாறு அரசனாக நியமிக்கப்பட்டார். அவர் பல நூல்கள் எழுதியிருக்கும் பெரும் புலவர்.  தனது சிற்றரசில் அக்கிரஹாரங்கள் இல்லாததை அறிந்து திருச்செந்தூரிலிருந்து திரிசுதந்திரர் என்னும் பிராமணக் குடும்பங்கள் சிலவற்றை அழைத்து வந்து ஐந்து அக்கிரஹாரங்களை உருவாக்கினார். அதில் ஒன்றுதான் தெற்கிலந்தைக் குளம். அதற்குப் பழைய பெயர் நைனார் கிராமம். இன்றும் அக்கிரஹாரம் செழிப்போடு இருக்கிறது.

எங்கள் ஊர் எல்லையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது.  ஒரு சமயம் காளமேகப் புலவர் அங்கே வந்தார். அவருக்குக் கடுமையான பசி. பெருமாள் புறப்பாடு ஆகப் போகிறது. நைவேத்யம் ஆனதும் சாப்பாடு கொடுக்கிறோம் என்றார்கள். பெருமாளின் சப்பரத்தைத் தூக்க ஒரு ஆள் குறைந்தது. காளமேகத்தைத் தோள் கொடுக்கச் சொன்னார்கள். அவரும் தோள்கொடுத்தார். ஆனால் பட்டாச்சார்யார் சப்பரத்தில் ஏறி அமர்ந்தார். காளமேகம் சினம்கொண்டார். உடனே கவிபாடினார்

பாளைமணம் கமழ்கின்ற கயத்தாற்றுப் பெருமாளே பழிகாரா கேள்

வேளையிவ் வேளையும் நாழிகை பதினைந்தின் மேலாயிற்று

தோளைமுறித் ததுமன்றி  நம்பியான் தன்னையும் சுமக்கச் செய்தாய்

நாளையினி யார்சுமப்பார், எந்நாளும் உன்கோவில் நாசந் தானே!”

என்று பாடினார். கோவில் இடிந்து விழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இலண்டனில் பிறந்து வளர்ந்த ஒருவர் நாடிஜோசியம் பார்க்கையில் அவர் பழைய ஜன்மமொன்றில் காளமேகம் என்றும் அவர் பெருமாள் கோவிலை மீண்டும் கட்டவேண்டும் என்று வந்தது. அவரது முயற்சியாலும் வேறுபலர் முயற்சியாலும் இப்பொழுது சிறிய அளவில் அந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

எங்கள் ஊர் எல்லைகளைப் பற்றிச் சொல்லவில்லையே!

தென்திசையில் புஞ்சையெனில் வடதிசையில் நஞ்சை

திகழ்பறம்பு மலை மேற்கே, கிழக்கில் நதி ஓடும்

அந்த நதிக்குக் கஜமுகா நதியென்றும் கோதண்டராம நதி என்றும் பெயர்கள் உண்டு. அது சிற்றாறுடன் இணைந்து சீவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது. அதனால் சீவலப்பேரிக்கு முக்கூடல் என்று பெயர் வந்தது.

கயத்தாற்றுக் காற்றுக் கடன் வாங்கி அடிக்கும் என்பார்கள். எங்கள் ஊர்க் காற்று அதற்கும் மேலே. அதனால் எங்கள் ஊர் பறம்புமலையை ஒட்டி 200க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. காற்றாடிகள் அடுத்தடுத்துச் சுழல்வதைக் காண்பதே ஒரு அழகு.

அக்கிரஹாரத்தில் வீரபத்திர சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவும். நடுவூரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கும் மாரியம்மன் கோவிலில்  தை மாதக் கொடையும், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனித் திருநாளும் சுடலைமாடன் கோவிலில் சாமக்கொடையும்  இராமசாமி கோயிலில் அடிக்கடி பஜனைகளும் மிகச் சிறப்பானவை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் திருவாறை என்ற பெயரில் ஒரு நகர் இருந்திருக்கிறது. இன்று அந்த ஊர் இல்லை. முற்றிலுமாக அழிந்துவிட்டது.  இன்றும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவாறை என்னும் நகர் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் தான் சுற்றிவருகிறது. எட்டாவது திருநாளன்று சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் வீதியுலா வரும் போது ஒருவர் தனது தொடையைக் கீறி இரத்தத்தை அம்மன் மீதும் சுவாமி மீதும் வீசுவார். அதற்குத் தொடைக்குத்து என்று பெயர்.

இரவினிலே பவனி வரும் எம்பெருமான் முன்பு 

எடுக்கின்ற தொடைக்குத்துக் காண்பதற்கு மக்கள்

திரண்டுவர மறுநாளில் தேரோட்டம் கொள்ளும் 

தெற்கிலந்தைக்குளமென்னும் ஊரெங்கள் ஊரே!

அந்தச் சடங்கு ஏன் என்று தெரியாது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக இதைச் செய்து வந்தனர். சமீபகாலமாக அந்த வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

மானம் பார்த்த பூமிதான். அங்கே குளமும் ஊருணியும் உண்டு.

அங்கே இளவட்டக்கல் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதைத்தூக்கிப் பின்புறமாகப் போடும் இளைஞர்கள்தான் திருமணத்துக்குத் தகுதியுள்ளவர்கள் என்ற நிலை இருந்தது. இப்பொழுது அந்தக் கல் இல்லை.

எங்கள் கிராமம் சிறிய கிராமம் தான். ஆனால் சிறப்பான  கிராமம்.  கிராமம் இப்பொழுது நன்கு வளர்ந்து வருகிறது.

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING