

எற்றுணையாக வேனும் எனக்குனைக் காட்டவேண்டும்
2005ம் ஆண்டு.. ஜூன் மாதம் 7ம் நாள் நான், என் பையன் சீநிவாச ராகவன் , என் மனைவி மூவரும் கைலாஸ் மலையைத் தரிசிக்க டெல்லியிலிருந்து பயணப்பட்டோம். டெல்லியிலிருந்து லக்னௌவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து வேன் மூலம் நேபாளத்தில் உள்ள நேப்பாள் கஞ்ச் என்னுமிடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து விமானம் மூலமும் ஹெலிகாப்டர் மூலமும் சேரா என்னும்சீன எல்லைக்குச் சென்றோம். அங்கிருந்து சென்ற இடம் தக்லக்கோட்.. கடல் மட்டத்திலிருந்து 22000 அடி உயரத்துக்குச் சென்றால் உடல் அந்த உயரத்தைச் சமாளிக்கத் திணறும் என்பதால் தக்லக்கோட்டில் இரண்டுநாட்கள் தங்கி உடலைச் சமனப்படுத்திக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் எங்களை மறு நாளே மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் சென்றார்கள். உடல் ஒத்துழைக்க வில்லை, எழுந்து உட்கார்ந்தாலே இதயம் படபடத்தது. மறுநாள் அங்கிருந்து கிளம்பி தார்ச்சீன் என்னும் கயிலை மலை அடிவாரத்துக்கு வேனில் சென்றோம். அங்கே தங்கினோம். பேனாவைப் பிடித்து எழுதினால் கூட இதயம் வேகமாகத் துடித்தது. அங்கிருந்து 52 மைல் தொலைவுக்குக் கயிலாயத்தைச் சுற்றி நடந்து செல்லவேண்டும். எனக்கும் என் மனைவிக்கும் நடக்க இயலாது என்று தோன்றிவிட்டது. என் மகன் மட்டும் பரிக்கிரமாவுக்கு நடந்து சென்றான். மறுநாள் காலை அறையில் அமர்ந்திருந்த போது பரிக்கிரமாச் செல்ல இயலாமல் உடம்பு படுத்துகிறதே என எண்ணி வருந்தினேன். அப்பர் கைலை அடிவாரம் வரை வந்து மலை ஏறமுடியாமல் சிவனை நினைந்து பாடி கயிலை நாதனைத் திருவையாற்றில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது. நாமும் தமிழ்க் கவிதை பாடி கயிலைநாதன் எந்த வடிவிலாது தரிசனம் தரவேண்டும் என்று வேண்டலாமே என்று எண்ணி ஒரு பாடல் எழுதினேன்.
சுற்றியே வந்து நின்னைத்
தொழுதிட நான் நினைந்தேன்
உற்றதோர் தொய்வால், ஒப்பில்
ஒருவனே, இயல வில்லை
முற்றிலும் நினைக்கா ணாது
முடங்கவோ, சிவனே நின்னை
எற்றுணை யாக வேனும்
எனக்கு நீகாட்ட வேண்டும்
என்று குறிப்பேட்டில் எழுதினேன். எழுதி முடித்து நிமிர்ந்து பார்த்தால் பரிக்கிரமா சென்ற என் பையன் எதிரில் நின்றான்.
“ஏன் திரும்பி வந்துவிட்டாய்?” என்று கேட்டேன்
செல்லும் வழியில் கடுமையான பனி. தொடர்ந்து போக முடியவில்லை. என்னுடன் திபேத்திய லாமாக்கள் இரண்டு பேர் வந்தனர். நான் அவர்களுடன் சென்றுகொண்டிருந்த போது லிங்க வடிவக் கூழாங்கற்களைப் பொறுக்கிக்கொண்டு வந்தேன்.
பெரிய லாமா என்னைப் பார்த்து”உனக்குக் கைலாய மலையைத் தரட்டுமா?” என்று கேட்டார். எனக்கு ஒன்றும்புரியவில்லை. அவர் பக்கத்திலிருந்த சின்ன லாமாவுக்குச் சைகை காட்டினார். அவர் ஒரு பையிலிருந்து ஒரு குட்டிக் கருங்கல் மலையைக் கையில் கொடுத்தார். அது கயிலாய மலையின் சுருங்கிய வடிவம்,”என்றான்
அதை வாங்கிப் பார்த்தேன் கயிலாய மலையின் தென் பகுதியில் உள்ள படிக்கட்டு அமைப்பும் உள் வெளி பரிக்கிரமா பாதைகளும் அப்படியே இருந்தன. “எற்றுணையாக வேனும் எனக்குனைக் காட்டவேண்டும்” என்ற என் வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்த்துவிட்டான்.
இந்தப் பயணத்தின் போது தமிழ்க்கவிதை இன்னோர் இடத்திலும் எனக்கு உதவியது.
கயிலாய யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி வந்த பொழுது கர்னாலி நதிக்கரையில் ஹில்ஸா எனுமிடத்தில் ஹெலிகாப்டரில் ஏறினோம். அது ஒரு பழைய கால ஹெலிக்காப்டர். ரஷ்யாவில் செய்தது. ஹெலிகாப்டர் கிளம்பி 10 அடி உயரத்துக்கு மேலே பறந்தது. திடீரென்று நில அதிர்வு போன்ற ஒரு சப்தம். உதவி பைலட் ஒரு கிறித்துவர் போலும் . பதறிப்போய் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு தலையிலும் தோள்பட்டைகளிலும் நெஞ்சிலும்கை வைத்து தொழுதுகொண்டே இருந்தார். அவருடைய முகம் வெளிறிப்போய் இருந்தது. ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்பது அப்பொழுதுதான் புரிந்தது. இயந்திரம் பழுதாகி ஹெலிக்காப்டர் கீழே விழுந்திருந்தது. இன்னும் 30 வினாடிகள் பயணப்பட்டிருந்தால் 1000 அடிக்குமேல் ஆழமுள்ள பள்ளாத்தாக்கில் விழுந்திருக்கும். எல்லோரும் இறையருளால் தப்பினோம். நேப்பாள் கஞ்சிலிருந்து பொறியாளர் வந்துதான் ஹெலிக்காப்டரைச் சரிசெய்ய வேண்டும் என்றும் இன்னும் இரண்டு நாட்கள் அந்த வனாந்திரத்தில்தான் தங்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள்.
வெளியிலே இறங்கி நின்று ஹெலிக்காப்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பைலட் ஹெலிக்காப்டரின் மேலேறி ஏதேதோ செய்து பார்த்தார். ஏதும் பயனில்லை. மீண்டும் என் தமிழின் உதவியை நாடினேன்
“ இத்தருணம் நேர்ந்துள்ள இன்னலெல் லாம்தீர்ந்து
பத்திரமாய்ச் சேரும் பரிசளிப்பாய்- அத்தனே
உன்னரு ளாலிந்த ஊர்திபிழை நீங்கிடவே
இன்னருள் செய்வாய் இசைந்து”
என்று ஒரு வெண்பா எழுதினேன். என் அருகில் நின்றுகொண்டிருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த சக பயணி” இன்னுமிரண்டு நாள்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. “” என்றார்.
“இன்னும் பதினைந்து நிமிடங்களில் சரியாகிவிடும்” என்றேன். அவர் என்னைப் பைத்தியம் என்று நினைத்திருக்கவேண்டும். அங்கிருந்து மற்றவர்கள்இருந்த இடம் சென்றேன் பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. ஒருவர் ஓடிவந்து எங்களிடம்” ஹெலிக்காப்டர் சரியாகி விட்டது. முதலில் செல்லவிரும்புவர்கள் வந்து ஏறிக்கொள்ளலாம்” என்றார்
மீண்டும் விழுந்து விடுமோ என்ற பயத்தில் பலர் பயந்தனர். நாங்கள் முன்சென்றோம். பெரிய சாமான்களை உடன் எடுத்துச் செல்லக்கூடாதென்றும் பின்பு கொணர்வதாகவும் சொல்லிவிட்டனர். என்ன செய்வது.? வேறு வழியின்றி சிறு கைப்பைகளை எடுத்துக்கொண்டு ஏறினோம். . எஞ்சின் இயக்கத்தில் கோளாறிந்திருந்ததோ என்னவோ? துணைவிமானி மீண்டும் தொழுகையில் இறங்கிவிட்டார். உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் ஜபமாலையைக் கையில் பிடித்துக்கொண்டு உருவேற்றிக்கொண்டிருந்தனர்.. ”போலோநாத்கி ஜெய்!” என்று கோஷமிட்டார் ஒருவர். எல்லோ¡ரும் பயபக்தியோடு “ஜெய்” என்று குரல்கொடுத்தனர். எமபயம் மனிதனை என்ன பாடு படுத்துகிறது?
நக்கீர தேவ நாயனார் சொல்கிறார்
“ தாம் பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெல் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார், காலனார்
தூரத்தே போவார் தொழுது”
இந்த நம்பிக்கை இருந்தால் பயம் வருமா? காலனார் தூரத்தே போனதனால்தானே ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கில் விழாமல் மேட்டில் விழுந்து எங்களைக் காத்தது. அந்த நம்பிக்கை தொடரவேண்டாமா? எனக்குக் கொஞ்சமும் பயம் வரவில்லை. ஹெலிகாப்டர் மேலே ஏறியது . இரண்டு மலைகளுக்கிடையே உள்ள குறுகிய இடைவெளியில் பறக்கத்தொடங்கியது.. எஞ்சினிலிருந்து வந்த சப்தம் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை . துணை விமானி கேபினுக்குள்ளே போய்ப் பார்த்துவிட்டு வந்து மீண்டும் தொழுகைக்கு அமர்ந்தார். இப்படியாக இரண்டு மூன்று தடவை. நான்காவது தடவை போய்விட்டு வந்ததும் அவர் முகத்தில் கலவரம் நீங்கிப் புன்னகை தோன்றியது.
தொழுகையில் அமரவில்லை. இடர்ப்பாடு நீங்கியிருந்தால் நன்றி சொல்லி அப்பொழுது தொழுகை செய்ய வேண்டாமோ? மனித வாழ்க்கையே அப்படித்தானே! ஒருவழியாக சிமிக்கோட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.. அங்கே ஏற்கனவே செய்தி போயிருக்கும் போலும். ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரையிறங்குவதைப் பார்க்க ஊரே படை திரண்டிருந்தது.
இலந்தை சு இராமசாமி